விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்

0
393

விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்தநாள் இன்று (09.09.2022) கொண்டாடப்படுகிறது.

1.சர்தார் ஆதிகேசவ நாயகர் :

புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி நாயகர் சென்னை கொருக்குப்பேட்டையில் குடியேறினார். அவரது நான்கு மகன்களில் முதலாமவர் பு.கி.மதுரைமுத்து நாயகர். மதுரைமுத்து நாயகருக்கும் அமிர்தம்மாளுக்கும் 09.09.1898ல் மூன்றாவது மகனராக பிறந்தவர் ஆதிகேசவ நாயகர்.

சென்னையில் மிகப்பெரிய வியாபாரமான சுண்ணாம்பு வியாபாரத்தில் ஈடுபட்டு நாயகரின் தந்தையார் பெரும் செல்வம் ஈட்டினார். தமது தந்தையாரின் தொழிலான சுண்ணாம்பு வியாபாரத்தில் தொடக்கக் காலத்தில் நாயகர் ஈடுபட்ட போதும் இவரது மனம் இந்திய விடுதலையையே நாடி நின்றது. சென்னையில் பல தொழிலாளர் இயக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக தாமே தலைமை தாங்கி போராடினார். சென்னை ரயில்வே தொழிலாளர் சங்ககளுக்கு வித்திட்டவர் ஆதிகேச நாயகராவார்.

மெட்ராஸ் மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், பொதுப்பணித்துறை பணியாளர் சங்கம், மெட்ராஸ் டிராம்வே தொழிலாளர் சங்கம் என அமைப்புகளை உருவாக்கினார். தொழிலாளர் போராட்டங்களில் டாக்டர் அண்ணி பெசன்ட் அம்மையார், சிங்காரவேலு செட்டியார், ப்பி.பி.வாடியா,திரு.வி.க. முதலானோருடன் இணைந்து இவர் செயல்பட்டார். தொழிலாளர் இயக்கங்களில் பங்கு பெற்றமை போன்றே நாயகர், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய நாயகர் 1925ல் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். சென்னை,செங்கற்பட்டு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் நாயகர் மகாத்மாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.1921,1936 ஆகிய ஆண்டுகளில் நேரு இரண்டு முறை சென்னை வந்த போது அவருடன் சேர்ந்து நாயகர் தமிழகம் முழுவதையும் சுற்றி வந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றிருந்த காலத்தில்தான் நாயகரின் திருமணமும் நடைபெற்றது.07.07.1927 அன்று செய்யூர் திரு.நாராயணசாமி நாயகரின் மகளார் இராசம்மாள் எனும் அம்மையாரை நாயகர் மனம் புரிந்து கொண்டார்.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் சென்னை நகரில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்தவர் ஆதிகேசவ நாயகராவார். அவருக்கு “சர்தார்” பட்டமும் கிடைத்தது. உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து 1930இல் மதுக்கடை எதிர்ப்புப் போர், அந்நியத் துணி கடை மறியல் போர் ஆகியன நாடு முழுமையும் நடைபெற்றன. வடசென்னைக்கென அமைக்கப்பட்ட குழுவிற்குத் திரு. ஆதிகேசவ நாயகர் தலைவராகவும்,திரு.ம.பொ.சி. செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவின்படிச் சட்ட மறுப்பு, மதுக்கடை மறியல், வரிகொடாப் போர் ஆகிய போர் முறைகளைக் காங்கிரஸ்காரர்கள் தீவிரமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன் காரணமாக 04.01.1932 அன்று நள்ளிரவில் பம்பாயில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். நாடு கொந்தளித்தது. இச்சூழலில் சென்னையில் இருந்த குறிப்பிடத்தக்க தலைவர்கள் ஆறு மாத காலத்திற்கு சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என்று ஆங்கில அரசு உத்தரவு பிறப்பித்தது.26.01.1932இல் வழக்கம்போல் காங்கிரஸ்காரர்களால் சுயராஜ்ய தினம் கொண்டாடப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.26ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடத்தில் இருந்து சட்டத்தை மீறி ஊர்வலம் மேற்கொண்ட திரு.சி.என். முத்துரங்க முதலியார், சர்தார் ஆதிகேசவ நாயகர் முதலானோர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட காந்தியடிகள் 20.12.1933 ஆம் தேதி சென்னை நகருக்கு வருகை தந்தார்.21.12.1933 அன்று வட சென்னையில் உள்ள ராபின்சன் பூங்காவில் காந்தியடிகள் ஆங்கிலத்தில் ஆற்றிய சொற்பொழிவை தமிழில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர் சர்தார் ஆதிகேசவ நாயகராவார். நாயகர் தமது இயக்கத்தின் கருத்துக்களை எவருக்கும் அஞ்சாமல் எடுத்துக் கூறியவர்.’இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இந்திய சட்டசபையும், சென்னை பிரதிநிதி சபையும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற காரணத்தால், அவை ஆங்கிலேயருக்கு உதவ கூடாது என எடுத்த முடிவை, மக்களுக்குத் தெரிவித்த போது, அரசியல் தியாகி சர்தார் பு.ம.ஆதிகேசவலு நாயக்கர் கைது செய்யப்பட்டார்.

1941இல் நாயகர் வேலூர் சிறையில் இருந்த பொழுது அவருடன் பூதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்யா வினோ பாபாவே உடனிருந்தார். வினோபா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருக்கு நாயகர் இரண்டு ஆண்டுகள் தமிழ் சொல்லிக் கொடுத்தார்.

சர்தார் நாயகரவர்கள் பல ஆண்டுகள் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்து பணியாற்றியுள்ளார். தீரர் சத்தியமூர்த்தி மேயராக இருந்த பொழுது இவர் துணை மேயராக இருந்து பணியாற்றினார். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக இவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார். காந்தியடிகளின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை சட்ட மறுப்பு இயக்கத்தைச் செம்மையாகச் செயல்படுத்த நாயகர் சென்னைக்காண ஐந்தாவது சர்வாதிக்காரியாக நியமிக்கப்பட்டார். காவல் துறையினரின் பலத்த தடியடியின் காரணமாக மூளை நரம்புகளில் ஏற்பட்ட காயங்கள் இவரை பிற்காலத்தில் செயலிழக்க செய்துவிட்டன.

இந்திய விடுதலைப் போரில் நாயகர் பங்கு பெற்று வேலூர், திருச்சி, சென்னை, அலிப்பூர், அமராவதி முதலான இடங்களில் உள்ள மத்திய சிறைகளில் மொத்தம் 11 ஆண்டு காலம் சிறைதண்டனை அனுபவித்தார். இவ்வாறு தனது சுகங்கள் அனைத்தையும் இழந்து சிறை வாழ்வையே அனுபவித்து இந்திய விடுதலைக்காக போராடிய பெருமைக்குரியவர் நாயகராவார். இதனால் தான் இவரது பல சொத்துக்களும் பறிபோயிற்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய தியாகங்கள் பலவற்றை இவர் செய்த காரணத்தினால்தான் சென்னையில் நடைபெற்ற தியாகிகள் பாராட்டு விழாவில் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் சென்னையில் முதல் தியாகியாக கதராடை பெறும் வாய்ப்பு நாயகருக்கு கிடைத்தது. சர்தார் ஆதிகேசவ நாயகர் 09.09.1964 அன்று இயற்கை எய்தியமை இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.

2. புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் செவாலியே செல்லான் நாயகர் :

09.09.1884 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காலாப்பட்டு என்ற ஊரில் இரத்தினசாமி இருசம்மாள் ஆகிய தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

செல்லான் நாயகர் அவர்கள் பக்கலோரிய (பி.ஏ. பட்டப் படிப்புக்கு சமமான பிரெஞ்சு மொழி பட்டப்படிப்பு) முடித்து 1913 ஆம் ஆண்டு (கஸ்த்ரோன் பியர் என்பவருக்குப் பிறகு) முதன்மை வக்கிலானார்.07.12.1919 இல் முனிசிபல் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுச்சேரி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் செல்லான் நாயகர்.அவர் 1919 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதாடி அவர்களுக்கு வெற்றிதேடி தந்தவர்.எனவே அவர் (பரோபகாரி அவுக்கா) என்று அழைக்கப்பட்டார்.

செல்லான் நாயகர் 1928இல் உழவர்கரை நகரமன்றத் தலைவராக அமர்த்தபட்டார்.இரண்டாவது முறையாக 1931இல் நகரமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செல்லான் நாயகர் செல்வாக்கும் அதிகாரமும் மிகுந்த Colonial Commission தலைவராக 1928 முதல் 1933 வரை பதவி வகித்தார். அப்பதவியில் அவர் உண்மையோடும் நேர்மையோடும் பணியாற்றினார்.நாயகரது சட்டப் புலமையை அங்கீகரித்த பிரெஞ்சு இந்திய அரசு நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ (Chevalier de la legion d Honneur) விருதை 1933 ஜனவரியில் வழங்கி அவரை கௌரவித்தது.1933 டிசம்பர் 29ஆம் நாள் செல்லான் நாயகர் மிகப்பெரிய பதவியான பொதுக்குழுத் (Conseil general) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்தியடிகள் 1934இல் புதுச்சேரிக்கு வருகை தந்த போது,செல்லான் நாயகர் ‘அரிசன நிதி’க்காக அவரிடம் பண உதவி வழங்கினார்.

செல்லான் நாயகர் கட்சி, வ.சுப்பையாவின் கம்யூனிஸ்ட் கட்சி, சோசியலிஸ்ட் கட்சி ஆகியவைகள் சேர்ந்த ‘ தேசிய மக்கள் முன்னணி’ புதுச்சேரியில் 1945இல் உதயமாகின.

1946 இல் புதுச்சேரியின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்திய தேசிய காங்கிரசும், பிரெஞ்சிந்திய மாணவர் காங்கிரசும் தொடங்கப்பட்டன.அந்த இரு அமைப்புகளுக்கும் செல்லான் நாயகர் ஆலோசகராக செயல்பட்டார்.

1947 ஆகஸ்டு 15ஆம் நாள் ஆங்கில இந்தியா விடுதலை அடைந்த பிறகு புதுச்சேரியின் விடுதலைப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு தினத்திலும் செல்லான் நாயகர் இந்திய தேசிய கொடியை தன் வீட்டில் ஏற்றுவார். பிரெஞ்சு காவலர்கள் கொடியை இறக்கும்படி அவரை மிரட்டுவார்கள். ஆனால் நாயகர் அவர்களின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்.

1948இல் இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசுகளுக்கிடையே கையெழுத்தான ‘வாக்கெடுப்பு’ Referendum நடத்துவதற்கான உடன்படிக்கையைப் பிரெஞ்சு அரசின் ஏமாற்று வித்தை என்று என்று கூறி அதைக் கடுமையாக செல்லான் நாயகர் எதிர்த்தார்.

பிரெஞ்சு இந்தியாவில் வாக்கெடுப்பு நடத்துவதற்காக சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக 1951இல் புதுச்சேரிக்கு வந்த பன்னாட்டு நீதிமன்றப் பார்வையாளர்களை செல்லான் நாயகர் தலைமையிலான இணைப்பு ஆதரவாளர்கள் குழு சந்தித்துப் பிரெஞ்சிந்திய அரசியல் சூழ்நிலையையும் வாக்கெடுப்பிற்கு எதிரான மக்கள் விருப்பத்தினையும் எடுத்துக்கூறினார்.அவ்வாண்டு சூலை மாதத்தில் செல்லான் நாயகரும் அவரது கூட்டாளிகளும் இந்திய பிரதமர் நேரு அவர்களை பெங்களூரில் சந்தித்து பிரெஞ்சுப் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பது குறித்த கோரிக்கையை அவரிடம் வலியுறுத்தினார்கள்.

செல்லான் நாயகரின் இணைப்பு காங்கிரஸ் ‘சோஷலிஸ்ட்’ கட்சிக்கு மாற்றாக வந்து விடும் என்ற அச்சத்தில் ‘சோஷலிஸ்ட்’ கட்சி செல்லான் நாயகரை கொன்று விட தீர்மானித்தது. அக்கட்சி ஏவிய குண்டர்கள் 1952 ஆகஸ்ட் 29இல் செல்லான் நாயகரை அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டார்கள். நாயகரது இடது தொடையில் குண்டு பாய்ந்தது. நாயகர் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பி. சுப்பராயன், மைசூர் மாநில முதல்வர் கெங்கல் ஹனுமந்தையா மற்றும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் நாயகர் மீது நடந்த கொலை முயற்சியை வன்மையாக கண்டித்தனர்.

விடுதலைப் போராட்டத்தை தீவிரப் படுத்துவதற்காக செல்லான் நாயகர் தலைமையில் ஒரு புதிய ‘மத்திய இணைப்புக் குழு’ 1954 ஜனவரியில் உருவாகியது. பிரெஞ்சு இந்தியாவில் பெயருக்கு தான் மக்களாட்சி உள்ளது. அங்கு நடப்பவை யாவும் அடக்கு முறையே என்றார் செல்லான் நாயகர்.

வ. சுப்பையா மற்றும் செல்லான் நாயகர் ஒன்று சேர்ந்து புதுச்சேரி விடுதலைக்காக போராடுவதாக முடிவு எடுத்து இருவரும் கூட்டாக 12.04.1954 அன்று பிரெஞ்சு இந்திய மகாஜனங்களுக்கு எங்களது வேண்டுகோள் என்று மற்ற அமைப்புகளையும் மக்களையும் போராட்டத்திற்கு அழைத்தார்கள்.

13.04.1954 இல் விடுதலைக்கான மாபெரும் போராட்டம் புதுச்சேரியில் நடந்தது. ஆயிரக்கணக்கான பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கு கொண்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டபோது செல்லான் நாயகர் நீதிமன்றத்தில் வாதாடி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார்.

இரு நாட்டு அரசுகளும் வாக்கெடுப்பு மூலம் மக்களின் கருத்தை அறிவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது சட்ட வல்லுநரான செல்லான் நாயகர் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்துவதும் ஒன்றுதான் என்று ஆலோசனை வழங்கினார்.

18.08.1954ஆம் நாள் கீழூரில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் விளைவாக நவம்பர் முதல் நாள் பழைய பிரெஞ்சு இந்திய பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவை இந்தியாவோடு இணைந்தன.

இணைப்புக்குப் பிறகு இந்திய அரசு செல்லான் நாயகரை சிறப்பித்து கௌரவித்தது. பிரெஞ்சிந்திய பகுதிகளின் அதிகார மாற்றத்திற்கான உடன்படிக்கை (Instrument of transfer of power) 1954 நவம்பர் முதல் நாள் கேவல்சிங்கிற்கும் ,பியர் லாந்திக்கும் இடையே புதுச்சேரியில் கையெழுத்தாகியது. அன்றே ஐந்து பேர் கொண்ட இடைக்கால ஆலோசனைக் குழு நிர்வாகத்தை கவனிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது. அக்குழுவில் கேவல்சிங், இம்மானுவேல் தத்தா, டாக்டர் சுகுமாரன், அருள்ராஜ் ஆகியோருடன் இடம் பெற்ற பெருமை செல்லான் நாயகருக்கு வழங்கப்பட்டது.

புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அரசுக்கு அளித்தார். புதுச்சேரிக்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து உயர் ஆணையர் (High Commissioner) கேவல்சிங்குக்கு 1954 டிசம்பரில் கடிதம் எழுதினார். ஐந்து ஆண்டு திட்டத்தில் விவசாய ஆய்வகம் போன்றவை ஏற்படுத்த அவர் அளித்த திட்டங்களை அரசு ஏற்றுக்கொண்டு அவைகளை உருவாக்கியது.

புதுச்சேரி அரசு செய்த சிறப்புகள்:

1. செல்லான் நாயகர் பிறந்த ஊரான பெரிய காலாப்பட்டில் உள்ள அரசுப் பள்ளி ‘செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப்பள்ளி’ என்ற பெயரை கொண்டுள்ளது.

2. புதுச்சேரி வடமேற்கு புறநகர் பகுதியில் ஒரு குடியிருப்புக்கு 1978இல் அவர் பெயரால் ‘செல்லான் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

3. புதுவைப் பல்கலைக்கழகம் 1986இல் செல்லான் நாயகரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அவரை பெருமைப்படுத்தியது.

4. ஏ. காங்கேயன், வ. சுப்பையா, என். சேதுராமா செட்டியார் போன்ற தலைவர்களைக் கொண்ட ‘செல்லான் நாயகர் ஞாபகார்த்த குழு’ செல்லான் நாயகருக்கு ஒரு நினைவு சின்னம் ஏற்படுத்துவதற்காக 14.08.1965இல் அமைக்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ அம்முயற்சி வெற்றி அடையவில்லை.

5. 2017 நவம்பர் முதல் நாள் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் ஆற்றிய விடுதலை திருநாள் உரையில் புதுச்சேரி விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் செல்லான் நாயகர் அவர்களையும் நினைவு கூர்ந்துள்ளார்.

– திரைப்பட ஒளிப்பதிவாளர் அருண் மொழி சோழன்.