இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

0
82

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிகப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜனவரி 26-ந் தேதியன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ல்) ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்குபதிவு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, பிப்ரவரி 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் சென்னை மாநகராட்சியில், பணப்பட்டுவாடாவை தடுக்க உடனடியாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாளை மறுநாள் தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னையில் பணம் மற்றும் பரிசு பொருட்களை தடுப்பதற்காக கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ககன்தீப் சிங் கூறுகையில்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னையில் கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படைகளை மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இதன்மூலம் சென்னையில் மொத்தமாக 90 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் குறித்து புகார் அளிக்கலாம் எனவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், சென்னையில் இதுவரை ரூ.1.45 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K