தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!

0
82

தஞ்சையிலுள்ள அரசுதவி பெரும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவியை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம்  வழங்கியுள்ளார்.

குழந்தைகளைக் காப்பதற்காக மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், குழந்தைகள் வார்டுகளில் சீரமைப்பு பணிகளுக்கான தொகையாக ரூ. 25லட்சம் பணமாகவும் வழங்கி ஜோதிகா அவர்கள் உதவியுள்ளார்.

Actress Jyotika donates Rs 25 lakh to Thanjavur Government Hospital
Actress Jyotika donates Rs 25 lakh to Thanjavur Government Hospital

தமிழகத்தின், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்தலோசித்த பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  மருது துரை அவர்களின்  ஒப்புதலின் பேரில் இந்த உதவிகளை அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார்.

அப்போது அவர், கோயில்களில் செலவு செய்வதற்கு பதிலாக மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டுமென்று அவர் கருத்தினை கூறியபோது ஆன்மீக சிந்தனை உள்ளவர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார்.

இதன்பிறகு அங்கு, பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் குழந்தை மற்றும் தாயின் உடல் நிலைகளை கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே, நடிகை ஜோதிகா தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதியுதவியினை, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார்.

ஜோதிகாவின் சார்பாக, மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,
“ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” எனக்கூறியுள்ளார்

மேலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்த்ராவ் பேசியதாவது, “ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் மருது துறை அவர்களும் நடிகை ஜோதிகா அவர்களின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது எனவும், அவருக்கு நன்றி கூறியும், இந்தச் செயல் முன்னுதாரணமாக கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

author avatar
Parthipan K