இவர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தொடர்கிறது! டிஜிபி அலுவலகம் வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

0
97

டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி ஆபரேஷனில் 20 தினங்களில் 1623 பேர் கஞ்சா வேட்டையில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 4.20 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா 23 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

இதுகுறித்து அவர் தமிழக காவல்துறையினருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு, விற்பனை உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், இதுபோன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இதுபோன்ற கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலி தொடரை உடைப்பதற்கு ஒட்டு மொத்த கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். கஞ்சா, லாட்டரி சீட்டு, குட்கா, உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலமாக அவர்களுக்கு கலந்தாய்வு வழங்கி அந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீண்டுவர செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு, அருகே குடியிருப்போரை ஒன்றிணைத்து வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கி ரகசிய தகவல்களை சேகரித்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும், ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க அந்த மாநில காவல் துறையுடன் சிறப்பு கூட்டு பயிற்சி செய்ய வேண்டும் இதை மாநில போதைபொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையங்கள் மற்றும் தொடர் வண்டிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு, உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ய வேண்டும். பள்ளி கல்லூரிகள் அருகே கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்வோர் மீது டிசம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் ஜனவரி மாதம் ஆறாம் தேதி வரையில் ஒரு மாத காலம் ஆப்ரேஷன் கஞ்சா என்ற அதிரடி வேட்டையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு உளவுத்துறை போலீசார் உதவி செய்ய வேண்டும் இது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி உள்ளிட்டோர் கண்காணித்து நாள்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய சுற்றறிக்கையில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக நேற்று வரையில் 6 ஆயிரத்து 672 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் ஆந்திராவில் பதுங்கியிருந்த கஞ்சாவின் மொத்த வியாபாரி பெரியசாமி என்பவர் மற்றும் சீனிவாசன் என்ற நபர் உள்ளிட்டோரை நாமக்கல் காவல்துறையினர் கைது செய்தார்கள். இவர்களின் நெட்வொர்க் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 டன் குட்கா, 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள 1774 கிலோ கஞ்சா, உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள், கார், மினி லாரிகள், என்று 164 வாகனங்களும் பறிமுதல் ஆகியிருக்கின்றன.

அதிகபட்சமாக தஞ்சாவூரில் 82 கிலோ, மதுரையில் 21 கிலோ கஞ்சா. பூந்தமல்லியில் 1200 கிலோ, திருச்சியில் 540 கிலோ குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 66 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. லாட்டரி சீட்டுகள் விற்ற 1091 பேர் கைதாகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 25.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள் காவல் துறையை சார்ந்தவர்கள்.

இது குறித்து டிஜிபி அலுவலகம் நேற்று வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு, உள்ளிட்டவற்றை விற்பனை செய்வோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கிலோ ஹெராயின் பதுக்கி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து 23 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அதிக அளவிலான ஹெராயின் சிக்கியது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.