மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை! வாரி வழங்கிய வள்ளல் கைது! 

0
104

மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை!  பப்ளிசிட்டி வாரி வள்ளல் கைது! 

மேம்பாலத்தின் மேல் நின்று கோட் சூட் அணிந்த ஆசாமி ஒருவர் திடீரென பணத்தை அள்ளி வீசியதால் அதை எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

கர்நாடகாவின் பெங்களூர் கே.ஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும். பணத்தைக் கண்டால் பிணம் கூட வாயை திறக்கும். என்ற பழமொழிகள் மனிதனுக்கு பணத்தின் மேல் இருக்கின்ற ஆசைகளை வெளிச்சம் போட்டு காட்டுவனவாக இருக்கின்றன. பணத்தாசை யாரையும் விட்டு வைக்காது. இத்தகைய பணத்தின் மேல் ஆசை இல்லாமல் ஒருவர் நடுரோட்டில் வீசி எறிந்த நிகழ்வும் அதை எடுக்க மக்கள் போட்டி போட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் மையப் பகுதியில் இருக்கும கே.ஆர் மார்க்கெட் வீதி எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அங்கு நேற்று வியாபாரிகள் மக்கள் கூட்டம் என வழக்கம் போல் அலைமோதி கொண்டிருந்தது.அங்கு திடீரென மேம்பாலத்தின் மீது இருந்து 10 ரூபாய், 500 ரூபாய், நோட்டுகள் திடீரென மழையாக பொழிய தொடங்கின. கோட் சூட் அணிந்து, கழுத்தில் சுவர் கடிகாரம் ஒன்றை மாட்டிக் கொண்டு  டிப்டாப்பாக டூவீலரில் வந்து இறங்கி ஆசாமி தனது கையில் இருந்த பையில் பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.

திடீரென பணமழை பொழிந்ததும் அதிர்ச்சி அடைந்த மக்கள் திகைத்து விட்டு பின்னர் அதை பொறுக்க போட்டா போட்டி போட்டனர். முதலில் மேம்பாலத்தின் கீழே இடதுபுற சாலையில் பணத்தை வீசி ஆசாமி அடுத்து வலது புறமும் சென்று பணத்தை அள்ளி வீசினார். இதனால் பணத்தைப் பொறுக்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே கூட்டம் அலைமோதும் கே ஆர் மார்க்கெட் இந்த சம்பவத்தினால் அதிக நெரிசலுக்கு ஆளானது.

சம்பவத்தை கேள்விப்பட்ட போக்குவரத்து போலீசாரும் கே ஆர் மார்க்கெட் போலீசரும் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த ஆசாமி தன் வைத்திருந்த டூவீலரில் ஏறி தப்பிச் சென்றார். திடீரென வாலிபர் பணத்தை வீசி எறிந்ததும் அதை எடுக்க மக்கள் போட்டி போட்டதும் மக்கள் பலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைரல் ஆக்கினர். தாங்கள் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட அது அதிகம் பேசும் பொருளானது. போலீசாரும் பணத்தை வீசி எறிந்த நபரைப் பற்றி விசாரணை செய்தனர்.

விசாரணையில் பணத்தை வீசி எறிந்தவர் பெயர் அருண் என்பதும் அவர் பெங்களூர் நாகரபாவியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொழிலதிபரான அருண் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் இவர் அருண் வி டாட் 9 என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இவர் 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் என 4 ஆயிரத்தை வீசி எறிந்தது தெரிய வந்தது.

அவர் எதற்காக கழுத்தில் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு பணத்தை வீசி இருந்தார் என்று போலீசார் விசாரணை செய்ததில் பப்ளிசிட்டிக்காக செய்ததாக அருண் கூறியுள்ளார்.