32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை! விடியலை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

0
90
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை! விடியலை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

பொதுத்துறை மற்றும் கூட்டுறவு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை 32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில் கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் ஊதிய பாகுபாட்டை களைவதற்கான ராஜிவ் ரஞ்சன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இரட்டை ஊதிய முறை அநீதி: சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு

இணையான ஊதியம் வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை 32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கி சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு மாற்றாக, ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கும் சர்க்கரைத் துறையின் சமூக அநீதி செயல்பாடுகளை சரி செய்ய தமிழக அரசு முன்வராதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் கட்டுப்பாட்டில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 18 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 8,446 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே நிர்வாகத்தின் கீழ் பணி செய்து வரும் நிலையில், அவர்களை இரு பிரிவாக பிரித்து ஒரு தரப்பினருக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கி வரும் சர்க்கரைத் துறை, இன்னொரு பிரிவு ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கி வருகிறது. இந்த இரு தரப்புக்கும் இடையான ஊதிய இடைவெளி, ஏணி வைத்தாலும் எட்டாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கிறது. ஒரே துறையில், ஒரே இடத்தில் பணியாற்றுவோருக்கு இரு வகையான ஊதியம் வழங்குவது அநீதியாகும்.

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கிடையே இத்தகைய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது தமிழக அரசின் சர்க்கரைத் துறை தான். 1985-ஆம் ஆண்டு வரை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் பணியாளர்கள் அனைவருக்கும் மத்திய அரசால் அமைக்கப்படும் சர்க்கரை ஆலைகளுக்கான ஊதியக் குழு தான் ஊதியத்தை நிர்ணயித்து வந்தது. 1988 முதல் இத்தகைய ஊதியக் குழுக்கள் அமைக்கப்படாத நிலையில், மாநில அரசுகளே ஊதிய ஒப்பந்தத்தின் மூலம் சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்கத் தொடங்கின. தமிழ்நாட்டில் இதற்கு பொறுப்பேற்ற சர்க்கரைத் துறை, 11 வகையான பணிகளை தனியாக பிரித்து அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தை நிர்ணயித்தது. அது மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், மற்ற பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இது தான் சிக்கலுக்கு காரணமாகும்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய ஏற்றத்தாழ்வை போக்க கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அவை அதிகார வட்டாரத்தால் முறியடிக்கப்பட்டு விட்டன. முதற்கட்டமாக, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க 2010-ஆம் ஆண்டில் அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால், அப்பரிந்துரையை அப்போதைய நிதிச் செயலர் நிராகரித்துவிட்டார்.

அதன்பின் சர்க்கரை ஆலை பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது குறித்தும், ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது குறித்தும் பரிந்துரைக்க இ.ஆ.ப. அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில் 7 பேர் குழுவை 2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அமைத்தார். அக்குழுவின் அறிக்கை அதே ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. ராஜிவ் ரஞ்சன் குழுவின் அறிக்கையில் சர்க்கரை ஆலை பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அந்த பரிந்துரை செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தாலும் அது செயல்படுத்தப்படவில்லை.

‘‘கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியமும், இன்னொரு பிரிவினருக்கு குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது நியாயமல்ல… இந்த பாகுபாடு போக்கப்பட வேண்டும்’’ என்று சென்னை உயர்நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பும் தமிழக அரசால் செயல்படுத்தப்படவில்லை. சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கான ஊதிய பாகுபாடு தவறு என்பதை தமிழக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்கிறது. ஆனால், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதைக் காரணம் காட்டி, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு மறுத்து வருகிறது. இது எவ்வகையிலும் நியாயமல்ல.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கு தொழிலாளர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அரசின் கொள்கைகளும், சர்க்கரை ஆலைகளுக்கு அரசு வழங்க வேண்டிய பல்வேறு நிலுவைத் தொகைகள் வழங்கப்படாததும் தான் இழப்புக்கு காரணம் ஆகும். அரசின் தவறால் ஏற்படும் இழப்புக்கு, உழைக்கும் தொழிலாளர்கள் பலிகடா ஆக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கூட்டுறவு & பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய பாகுபாட்டை போக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்துக் கொண்டிருந்த போது ஆணையிட்டவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், அதிகாரிகளின் சதியால் அது செயல்படுத்தப்படவில்லை. இப்போது அவரே முதலமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் ஊதிய பாகுபாட்டை களைவதற்கான ராஜிவ் ரஞ்சன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.