இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! வரும் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது! கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

0
75

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலிடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுநாள் வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக தென்கிழக்கு வங்க கடல், தென்மேற்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். ஆகவே வரும் 19ஆம் தேதி வரையில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு நடுவில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 19ஆம் தேதி வரையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், தலைநகர் சென்னையில் பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில், 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 12 சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே வங்கக்கடல் பகுதியில் இன்று ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது .இது வரும் 19ஆம் தேதி தமிழக கடலோர பகுதியை நெருங்கி வரும் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக புதுவை முதல் டெல்டா மாவட்டங்கள் வரையில் அதிக கன மழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. காத்தழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, எந்த பகுதியில் கனமழை பெய்யும் என்பது தொடர்பாக இன்று வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.