கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!

0
174
#image_title

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு! 

கருத்தரிக்காமலேயே பிறந்த குழந்தை காணாமல் போனதாக இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் கர்ப்பமாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தாயுடன் வந்து சேர்ந்துள்ளார். 

அங்கு தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் இன்குபேட்டரில் குழந்தையை வைக்க எடுத்துச் சென்றதாகவும் உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.

பிரசவத்திற்கு பின் தான் மருத்துவமனையை விட்டு சிறிது நேரம் வெளியே சென்றதாகவும், அப்போது குழந்தையை எடுத்து வைத்துக்கொண்டு தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கூறி ஏமாற்றுவதாகவும் உமா மகேஸ்வரி மருத்துவமனையில் சத்தம் போட்டார்.

இதனால் கோபம் அடைந்த உமா மகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனக்கு பிறந்த குழந்தை என கணவர் மற்றும் உறவினர்களுக்கு உமா மகேஸ்வரி வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஒரு குழந்தையின் புகைப்படத்தைக் காட்டி இது தனது குழந்தை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் உமா மகேஸ்வரி தங்கள் மருத்துவமனைக்கு வந்ததே இல்லை என்று கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உமா மகேஸ்வரி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரிய வந்தது.

மேலும் மருத்துவர்கள் உமா மகேஸ்வரியை பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமானத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதும் கணவர் குடும்பத்தை ஏமாற்றுவதற்காக அவர் நாடகம் ஆடியதும் தெரியவந்தது. கருத்தரிக்காமலேயே குழந்தை பிறந்ததாக கணவர் குடும்பத்தை நம்ப வைக்க இளம்பெண்  நாடகமாடியது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களை நம்ப வைக்க உமா மகேஸ்வரி நடத்திய நாடகத்தால் அவரது கணவன் குடும்பத்தினர் ஆவேசமடைந்து கோபத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். குழந்தை நாடகமாடிய உமா மகேஸ்வரியையும் அவரது தாயையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.