பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 

0
161
#image_title

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 

சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அவர்களின் சைக்கிள் மீது மோதியதில் 3 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது பற்றிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக் த/பெ.சாமுவேல் வயது 13, விஜய், த/பெ.ராஜி வயது12, மற்றும் சூர்யா, த/பெ.ராஜி வயது 10, ஆகிய மூன்று மாணவர்களின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.