99.9% ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு! அமெரிக்கர்கள் அதிர்ச்சி!

0
105

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் 99.9% ஒமைக்ரான் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கினாலும், அதிகம் பரவியது அமெரிக்காவில்தான். அதன்பிறகு, பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களும், அமெரிக்காவில்தான் அதிகம் பரவி, பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு, இந்தியாவிலு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையே உலுக்கியது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரசும், அமெரிக்காவை கட்டம் கட்டியுள்ளது. ஒமைக்ரான் கண்டறியப்பட்ட உடனே, எல்லைகளை மூடிய அமெரிக்கா, தொற்று கண்டறியப்பட்ட நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்தது. விமானப் பயணிகளை கடும் ஆய்வுக்குப் பிறகே அனுமதித்தனர்.

ஆனால், கட்டுப்பாடுகள் எவ்வளவு விதித்தாலும், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜனவரி 30 நிலவரப்படி, அமெரிக்காவில் உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்புகளில் 99.9% ஒமைக்ரான் வகை என அந்நாட்டு நோய்க்கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை 0.1% என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக பரவக் கூடிய தன்மை கொண்ட இந்த ஒமைக்ரான், அறிகுறியற்றதாக உள்ளது. அதே நேரத்தில், அதன் வீரியம் குறைவு என்பதே சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது. பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், பாதிப்பு குறைந்துள்ளதாக அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.