ஒருவருக்கு 50 ஆயிரம் உதவி! வழங்காவிட்டால் வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு நிவாரண நிதியை வழங்கியது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக 50 ஆயிரம் கடனுதவி வழங்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்திருந்தார். இதுகுறித்து தற்போது ஆவணமின்றி கடன் கேட்டால் எப்படி கடன் தருவது என அமைச்சர் செல்லூர் ராஜு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் அறிவித்தது போல நாடக கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது 100 க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார்.

நாடக கலைஞர்களுக்கு நிவாரண உதவியை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில் கூறியதாவது.

தமிழகத்தில் சிறுகுறு தொழில் செய்பவர்கள் குடும்ப அட்டையுடன் வந்தால் அவர்களுக்கு கூட்டுறவு வங்கி மூலமாக 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்ப அட்டையுடன் வரும் வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஏற்கனவே அறிவித்தது போல 50 ஆயிரம் கடனுதவி வழங்காவிட்டால் அது குறித்து எனக்கு வாட்ஸ் ஆப்பில் புகார் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார் குறித்து விசாரித்து விட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக ரூ.56 ஆயிரம் கோடி டெபாசிட் கூட்டுறவு வங்கிகளில் உள்ளது. ஆனால் எந்த ஆவணமும் இல்லாமல் கடன் கேட்டால் எப்படி கொடுப்பது என்றும் அவர் வருத்தத்துடன் அப்போது தெரிவித்தார்.

மேலும் ரேசன் கடைகளில் அறிவித்துள்ளதை விட குறைவாக அரிசி வழங்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நல்ல விஷயம் தான். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள எந்தவொரு ரேசன் கடைகளிலும் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருந்தால் எனக்கு புகார் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களிடையே பண புழக்கத்தை அதிகரிக்கவே கூட்டுறவு வங்கிகள் சார்பாக 50 ஆயிரம் கடனுதவி வழங்க தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copy

Comments are closed.

WhatsApp chat