12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்!

0
184
#image_title
12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்! 
சட்டமன்றத்தில் ஏற்றப்பட்ட 12 மணி நேர கட்டாய வேலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இது தொழிலாளர் விரோதப் போக்கு என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையாக கடைபிடித்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யவும், அம்மாவின் அரசால் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதப்படும் போதெல்லாம் எங்களைப் பார்த்து கேலி பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய விடியா அரசின் முதலமைச்சர், கொத்தடிமையாக மாறி 21.4.2023 அன்று தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக, 12 மணி நேர கட்டாய வேலை திருத்தச் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் ஒருதலைபட்சமாக நிறைவேற்றியதை அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடியா திமுக அரசு செய்யும் அனைத்து செயல்களுக்கும் தலையாட்டும் அதன் கூட்டணிக் கட்சிகளே, இந்த சட்டத்தை எதிர்த்துப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது, இந்த அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்த விடியா அரசின் முதலமைச்சர் தன்னிலை உணர்ந்து மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இல்லையெனில், தமிழக தொழிலாளர்களின் நலனைக் காக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று எச்சரிக்கிறேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு தற்போது நிறைவேற்றியுள்ள 12 மணி நேர கட்டாய வேலை சட்டத்தை திரும்ப பெற கோரி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும்  போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
author avatar
Savitha