பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! மாணவர்களே தயாராகுங்கள்!

0
126

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சரிவர செயல்படாததால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

இந்தநிலையில், இந்த வருடம் நோய் தொற்று குறைய தொடங்கியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படத் தொடங்கினர். முதலில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த வருடம் நடைபெறுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் பூதாகரமாக எழுந்தது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிச்சயமாக இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று முன்பே தெரிவித்திருந்தார்.

நோய் தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட சூழ்நிலையில், தற்போது நோய்த்தொற்று பரவல் குறைந்திருப்பதால் மறுபடியும் திறக்கப்பட்டு நேரடியான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது.

இதற்கு நடுவில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.

அதனடிப்படையில், 10ம் வகுப்பு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகயிருப்பதாக முன்பே தகவல் வெளியாகியிருந்தது.

இந்த சூழ்நிலையில், 10,11,12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கான அட்டவணை தொடர்பான அறிவிப்பை இன்று காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டிருக்கிறார்.

10ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.6-ஆம் தேதி முதல் மே.30ஆம் தேதி வரை நடைபெறும்.

11ம் வகுப்புக்கான தேர்வுகள்:மே.9-ஆம் தேதி முதல் மே.31ஆம் தேதி வரை நடைபெறும்.

12ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.5ஆம் தேதி முதல் மே.28ஆம் தேதி வரை நடைபெறும்.

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் ஆரம்பமாகிறது.

அதோடு பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.