10% இட ஒதுக்கீடு தீர்ப்பு – சமூக நீதியின் மீதான தாக்குதல்! மருத்துவர் ராமதாஸ் காட்டம் 

0
111
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு – சமூக நீதியின் மீதான தாக்குதல்! மருத்துவர் ராமதாஸ் காட்டம்

சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல், அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூக நீதியின் மீதான தாக்குதல் ஆகும்” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று`அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “பொருளாதார அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உயர் வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு இரு வகைகளில் அரசியலமைப்பு சட்டத்தின் இரு முக்கிய அம்சங்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அவற்றில் முதலாவது கல்வி, சமூக நிலை ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்பதாகும்.

அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வியிலும், சமூக நிலையிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அவர்களில் பட்டியலினத்தவரும், பழங்குடியினரும் கல்வி, சமூக நிலையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மற்றவர்களை அடையாளம் காண்பதற்காகவே பின்னாளில் காகா கலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணையமும் அமைக்கப்பட்டன.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண மண்டல் ஆணையம் ஆய்வு செய்த 11 காரணிகளில் ஒன்று கூட தனித்த பொருளாதாரம் சார்ந்தவை அல்ல. கடன், குடிசை வீடுகள், குடிநீர் வசதி இல்லாமை போன்ற சமூக பின்தங்கிய நிலைக்கு காரணமான அம்சங்கள்தான் கருத்தில் கொள்ளப்பட்டன. சமூக ஏற்றத் தாழ்வுகளின் கொடிய அடக்குமுறைகளை இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர் என்பதால் தான் ஓபிசி இட ஒதுக்கீடு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வழங்கப்பட்டது.

ஆனால், இப்போது சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல், அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூக நீதியின் மீதான தாக்குதல் ஆகும்.

இட ஒதுக்கீடு என்றாலே புள்ளிவிவரங்கள் எங்கே என்று கேட்கும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் அத்தகைய வினாவை எழுப்பாதது மிகவும் வியப்பளிக்கிறது. எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர் வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது குறித்து உச்ச நீதிமன்றமும் எந்த வினாவும் எழுப்பாததை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, அதை உறுதி செய்ய போதிய அளவில் புள்ளி விவரங்கள் இருந்தும் கூட, கூடுதல் புள்ளிவிவரங்களை திரட்ட வேண்டும் என்று கூறி அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஆனால், எந்த புள்ளிவிவரமுமே இல்லாமல் உயர் வகுப்பு ஏழைகள் இட ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சமூக நீதி இரு அளவுகோல்களால் அளவிடப்படக் கூடாது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், உயர் வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்திருந்தாலும் கூட, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 5 நீதிபதிகளும் கூறியிருக்கின்றனர். இது இந்தியாவின் சமூக நீதி தத்துவத்தை வறுமை ஒழிப்பு கொள்கையாக குறுக்கி விடும். மேலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்க வகை செய்யும்.

இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மிகக் கூடாது என்று 1962-ம் ஆண்டில் பாலாஜி வழக்கிலும், 1992ம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், உயர் வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பதற்காக, இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு வளைக்க முடியாதது அல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுவும் சமூக அநீதியானது.

ஒருபுறம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பகுதியினருக்கு கிரீமிலேயர் தத்துவத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உயர் வகுப்பினருக்கான இடஓதுக்கீட்டின் அளவு அவர்களின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. ஆனால், பிற பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அவர்களின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு வளைக்கத்தக்கது தான் என்று உச்ச நீதிமன்றமே கூறி விட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்ய அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்தி நிர்ணயிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று அவர் அதில் கூறியுள்ளார்.