மக்களிடம் பத்திரம் எழுதி கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்..!

0
817

பத்திரம் எழுதி கொடுத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு பீட்டா நிறுவனத்தின் அழுத்தத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெரினாவில் திரண்டு கிட்டத்தட்ட 20 நாட்களாக போராடி ஜல்லிக்கட்டிற்கான தடையை தகர்த்தெறிந்தனர். தமிழர்களின் இந்த உணர்வுப்பூர்வமான போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன் தமிழனின் பெருமையை உலகமெங்கும் பறைச்சாற்றியது.

இந்த ஜல்லிக்கட்டு போராடத்தில் இருந்து பிறந்தது தான் ”தமிழ்நாடு இளைஞர் கட்சி” எனும் புதிய கட்சி. சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை தலைமையாய் ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னையின் மதுரவாயல் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கு.சண்முகம் போட்டியிடுகிறார். தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம் “ மோதிரம்”. சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றவர்களை காட்டிலும் சற்று வித்யாசமாகவே திகழ்கின்றனர்.

பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த முன்னணி கட்சிகள் இலவசங்களை கூறி வாக்குறுதி சேகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு இளைஞர் கட்சியோ வெற்றிப்பெறுவதற்கு முன்னதாக தொகுதி மக்களுக்கு பத்திரம் எழுதி கொடுத்து வாக்கு சேகரிக்கின்றனர். மதுரவாயல் தொகுதியில் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்று தரப்படும், அயப்பாக்கம், அடையாளம்பட்டு, வானகரம் ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கபப்டும், சட்டமன்ற உறுப்பினருக்கு வருடம் தோறும் அளிக்கப்படும் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியை மக்கள் நலனுக்கு உரிய முறையில் செலவு செய்யப்படும், லஞ்சம், ஊழல் இல்லாமல் ஆண்டுதோறும் எனது சொத்து மதிப்பு சமர்ப்பிக்கப்படும், தினம் ஒரு பகுதிக்கு நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த வாக்குறுதிகளை 3 ஆண்டுகளில் நான் செய்ய தவறினால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என பத்திரத்தில் குறிப்பிட்டு சண்முகம் கையெழுத்திட்டுள்ளார்.

author avatar
CineDesk