ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்- ஆந்திராவில் பரபரப்பு!

0
60

ஆந்திராவில், திருப்பதி அருகே உள்ள சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜெகன்மோகன் ரெட்டி அரசை கண்டித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்துகின்றனர். சித்தூர் காந்தி சிலை அருகே இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலின்போது, மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என பல இடங்களில் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை.

கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதாக நள்ளிரவில் அரசாணையை, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். ஆனால், அரசு ஊழியர்களுக்கு எவ்வித சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பிட்மெண்ட் 23% உயர்த்தி உள்ளார். இதனால், அரசு ஊழியர்களுக்கு எந்தவித பயனும் இல்லை.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாக சென்று மனு வழங்குவோம் என கூறியுள்ளனர். இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதம் 7ஆம் தேதி அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளனர்.