உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு வயநாடு செல்லும் ராகுல் காந்தி!

0
62

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு வயநாடு செல்லும் ராகுல் காந்தி!

 

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘மோடி’ சமூகத்தவரை குறித்து அவமரியாதையாக பேசினார் என்று ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இந்நிலையில் ‘மோடி’ என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்திக்கு எதிராக சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனால் ராகுல் காந்தி வகித்து வந்த எம்.பி. பதவி தீர்ப்பு வழங்கிய அடுத்த நாளே பறிபோனது.இதனை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

இந்நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும்,மேலும் இவருக்கு வழங்கப்பட்ட தண்டனையால் ஒரு எம்.பி. மட்டுமல்ல ஒட்டு மொத்த வயநாடு தொகுதி மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.இதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து ராகுல் காந்தி 136 நாட்களுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார்.

 

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ராகுல் காந்தி முதன் முறையாக அவரது சொந்த தொகுதியான கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.