18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு

0
240
verdict on 18 mlas disqualification case-News4 Tamil
verdict on 18 mlas disqualification case-News4 Tamil

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு

ஆட்சியை கலைக்க முயற்சித்ததாக எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார். இதனால் அதிமுகவின் ஆட்சி கவிழாமல் பெரும்பான்மை பலத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்கிறது.

கடந்த ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை அ.தி.மு.க அரசை கவிழ்க்க முயற்சித்ததாக கூறி சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜியும், தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பு வழங்கினர். மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலா விசாரிப்பார் என்று நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் அறிவித்தார்.

TTV Dinakaran-News4 Tamil
TTV Dinakaran-News4 Tamil

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதியாக எம்.சத்யநாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.இதனை அடுத்து வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் ஆகஸ்ட் மாதத்திற்கு  தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும்,கொறடா உத்தரவை மீறியதாக எம்.எல்.ஏக்கள் 18 பேர்  தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்றும் நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்கத்திற்கு முன்னதாக எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளிக்க போதிய கால அவகாசம் கொடுத்து உரிய நடைமுறைகளை பின்பற்றியே சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு குறித்து தான்  எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் நீதிபதி சத்யநாராயணன் கூறியுள்ளார். அத்துடன் தகுதி நீக்கத்திற்கு எதிராக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தொடர்ந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

verdict on 18 mlas disqualification case-Judge-News4 Tamil
verdict on 18 mlas disqualification case-Judge-News4 Tamil

மேலும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும்,தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீதிபதி நீக்கியுள்ளார்.

நீதிபதி சத்யநாரயணன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே காலியாக இருக்கும் 2 தொகுதிகளை சேர்த்து, 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.இந்த தீர்ப்பினால், தமிழக சட்டப்பேரவையின் பலம் 234 ல் இருந்து 214 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மையைப் பெற 107 பேரின் ஆதரவு தேவைப்படும். அதிமுகவுக்கு தற்போது 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது.

இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆபத்து நீங்கியது. டிடிவி தினகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here