Minister CV Shanmugam Asks DMK Leader MK Stalin to Enquire About Anna Nagar Ramesh Sadiq Basha Case-News4 Tamil Online Tamil News Channel
Minister CV Shanmugam Asks DMK Leader MK Stalin to Enquire About Anna Nagar Ramesh Sadiq Basha Case-News4 Tamil Online Tamil News Channel

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் விசாரணை கேட்கும் ஸ்டாலின் அண்ணா நகர் ரமேஷ் மற்றும் சாதிக் பாஷா விவகாரத்தை விசாரிக்க தயாரா?- அமைச்சர் சி.வி. சண்முகம்

கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை மற்றும் அதன்பிறகு நடந்த கொலைகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரணமா? அதில் சம்பந்தபட்டிருக்கிறாரா? இல்லையா? என்பதை அறிய விசாரணை வேண்டும் என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கேட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை எனவும் இதைப்போலவே அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாஷா இறந்த விவகாரத்தை  விசாரிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? என்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் புகுந்த ஒரு கொள்ளை கும்பல் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு,அவருடன் பணிபுரிந்த  மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரையும் தாக்கிவிட்டு அங்கிருந்த சில பொருள்களை அந்த கும்பல் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் என்பவர் சேலம் அருகே மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்தார். அதே நேரத்தில் இந்த விவகாரம் சம்பந்தமாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த சயன் என்பவரும் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்யப்பட்டது, அங்கிருந்த பொருள்களை திருடியது, ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் இறந்தது சம்பந்தமாக தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ ஒரு வீடியோ காட்சியை சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வெளியிட்டார்.

அவர் வெளியிட்டஅந்த வீடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் இறந்ததற்கும் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. தமிழக முதல்வரை குற்றம் சாட்டி வெளியான இந்த வீடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடன் அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருப்பதாகவும், வீடியோவை வெளியிட்ட மாத்யூ, அந்த வீடியோ காட்சியில் பேட்டியளிக்கும் சயன் மற்றும் மனோஜ் என இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

இந்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் உண்மைநிலை என்னவென்பதை தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்றும, இந்த விவகாரத்தில் சரியான விசாரணை வேண்டும் என்றும்  திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,கொடநாடு விவகாரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர் என்றும், இந்த விவகாரத்தில் முறையான ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாநகர் ரமேஷ் மற்றும் சாதிக் பாஷா கொலையை பற்றி விசாரிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.