கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்  பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்-மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

0
172
Dr Ramadoss Demand to Rush up Relief Works in Gaja Cyclone Affected Areas_News4 Tamil
Dr Ramadoss Demand to Rush up Relief Works in Gaja Cyclone Affected Areas_News4 Tamil

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்
பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்-மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்  பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று காலை கரையைக் கடந்த கஜா புயலால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் சேதங்களை சீரமைத்து இயல்பு நிலையை மீட்க வேண்டியது அவசரத் தேவையாகும்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் எந்தப் பகுதியைத் தாக்கும் என்பது எளிதில் கணிக்க முடியாததாகவே இருந்தது. சென்னைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்ட புயல் அங்கிருந்து கிட்டத்தட்ட 500 கிலோமீட்டருக்கும் அப்பால் அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்துள்ளது. கஜா புயல் குறித்த முதல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியானதுமே சேதத் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்புப் பணிகளில் அனுபவம் பெற்ற அதிகாரிகளை அனுப்பி தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என கடந்த 12&ஆம் தேதி தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

தமிழக அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பி வைக்கப் பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் சேதங்களும், பாதிப்புகளும் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் பாதிப்புகள் இன்னும் மோசமாக இருந்திருக்கக்கூடும். வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததால் தஞ்சாவூரில் 5 பேர் உட்பட மொத்தம் 9 பேர் புயல் மழைக்கு உயிரிழந்துள்ளனர். இன்னும் கூடுதலான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளையும் தடுத்திருக்க முடியும். இருப்பினும் களப்பணிக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவையாகும்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்-மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
Dr Ramadoss Demand to Rush up Relief Works in Gaja Cyclone Affected Areas

கஜா புயல் தாக்கியதால் காவிரி பாசன மாவட்டங்களாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களும் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்ததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அந்தப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இப்பணிகளில் இப்போது ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதல்ல என்பதால், பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்களை வரவழைத்து மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

மணிக்கு 110 கி.மீ வேகத்தில் வீசிய புயலாலும், 170 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழையாலும் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை. அவற்றை உடனடியாக கணக்கிட்டு பாதிக்கப் பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், பயிர்க்காப்பீட்டுத் தொகையையும் அரசு பெற்றுத்தர வேண்டும்.

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு மட்டுமின்றி, பொறுப்புள்ள குடிமகன்களுக்கும் உண்டு. எனவே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களும் ஈடுபட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் புயல் சேத நிவாரணப் பணிகளுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here