தமிழக அரசு தேர்வுகளை தமிழில் நடத்தவில்லையென்றால் டி என் பி எஸ் சியை இழுத்து மூடுங்கள் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

0
96
Dr Ramadoss's Report against Tamilnadu Government on Nutritional workers demands
Dr Ramadoss's Report against Tamilnadu Government on Nutritional workers demands

தமிழக அரசு தேர்வுகளை தமிழில் நடத்தவில்லையென்றால் டி என் பி எஸ் சியை இழுத்து மூடுங்கள் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால்
டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என மருத்துவர்  ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும் நிலையில், பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவி பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் ஆய்வாளர் உள்ளிட்ட 23 வகையான பணிகளில் காலியாக உள்ள 1199 இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் தொகுதித் தேர்வுகள் வரும் 11-ஆம் தேதி தொடங்க உள்ளன. இத்தேர்வுகள் உட்பட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து நிலை போட்டித் தேர்வுகளுக்குமான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப் பட வேண்டும். ஆனால், இப்போது அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல தாள்களுக்கு தமிழில் வினா தயாரிக்க தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்றும், அதனால் பல தாள்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னையில் நேற்று தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் தொகுதி தேர்வு எழுதும் 6.26 லட்சம் பேரில் 4.80 லட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 லட்சம் பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதற்கான முதனிலைத் தேர்விலோ அல்லது முதன்மைத் தேர்விலோ அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாக்கள் தமிழில் கேட்கப்படாமல், ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்பட்டால் அது தமிழில் தேர்வெழுதும் போட்டித் தேர்வர்களுக்கு மிகக்கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தும். எந்தவொரு போட்டித் தேர்வாக இருந்தாலும் குறைந்தது 25 முதல் 30% மதிப்பெண்களுக்கு இந்த பாடங்களில் இருந்து வினா கேட்கப்படும். அந்த வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால் அது தமிழை விருப்பப்பாடமாக எடுத்த 4.80 லட்சம் பேரின் வாய்ப்புகளை பாதிக்கும். மற்ற போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் தமிழில் விடைத்தாள் தர மறுப்பது நியாயப்படுத்த முடியாத சமூக அநீதியாகும்.

தமிழக அரசு தேர்வுகளை தமிழில் நடத்தவில்லையென்றால் டி என் பி எஸ் சியை இழுத்து மூடுங்கள் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
தமிழக அரசு தேர்வுகளை தமிழில் நடத்தவில்லையென்றால் டி என் பி எஸ் சியை இழுத்து மூடுங்கள் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும். எந்த வினாத்தாளும் ஆங்கிலத்திற்கு தனியாகவும், தமிழுக்குத் தனியாகவும் தயாரிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு, மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தான் வழக்கமாகும். தேர்வாணைய அதிகாரிகள் கூறுவதைப் போல ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதை தமிழில் மொழி பெயர்ப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால், இதைக் கூட செய்வதற்கு முன்வராமல் ஆங்கிலத்திலேயே வினாத்தாள் வழங்குவது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறுவது இயல்பான ஒன்றாகத் தெரியவில்லை. தமிழர்களுக்கு எதிரான சதியாகவே தோன்றுகிறது. அண்மையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்பப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் பணிக்கான போட்டித்தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்பட்டது. விரைவில் நடைபெறவுள்ள கைரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் தொகுதி தேர்வுகளும் திட்டமிட்டு ஆங்கிலமயமாக்கப்படுகிறது.

தேசிய அளவிலான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்துகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் கூட தமிழில் தேர்வெழுதி இ.ஆ.ப. அதிகாரி ஆனவர் தான். அவ்வாறு இருக்கும் போது மாநில மொழியில் தேர்வெழுதுவதற்கான வினாத்தாள்களை தயாரிக்க முடியாதது அவமானம் ஆகும்.
பொதுவாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்போரில் பெரும்பான்மையினர் தமிழில் தேர்வெழுதவே விரும்புவர். ஆனால், அந்த வாய்ப்பைப் பறித்து ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும் என்ற நிலையை உருவாக்குவதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி, அனைத்து போட்டித் தேர்வர்களையும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்புவது தான் அந்த சதியாகும். போட்டித் தேர்வர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பணியாளர் தேர்வாணையம் தனியார் பயிற்சி நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கத் துடிப்பது நியாயமானதல்ல.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம். எனவே, சொத்தைக் காரணங்களைக் கூறி ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு பதிலாக, அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாம் தொகுதி முதனிலைத் தேர்வுக்கான வினாத்தாள் முழுமையாக தமிழில் தயாரிக்கப்படாவிட்டால் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைத்து, தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டவுடன் நடத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படாவிட்டால் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here