மத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது

0
120
Dispute Between RBI and Government Solved-News4 Tamil Online Tamil News Channel
Dispute Between RBI and Government Solved-News4 Tamil Online Tamil News Channel

மத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது

பல நாட்களாக மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை, இன்று நடந்த ரிசர்வ் வங்கி வாரியக் கூட்டத்தில் சாதகமாக முடிந்தது.

9 மணி நேரமாக நடந்த இந்த கூட்டத்தின் நிறைவாக பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக அதற்கேற்றவாறு விதிமுறைகளைத் தளர்த்தவும், சிறு, குறுந்தொழில்களுக்குக் கடன் வழங்குவதற்கு ஏற்றவாறு விதிமுறைகளைத் தளர்த்தவும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரச்சனை

பல நாட்களாக மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக வதந்திகளும்,செய்திகளும் வந்து கொண்டிருந்தது. ஆனால், சமீபத்தில் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்திய அரசின் தலையீட்டால் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பாதிப்படுவதாக மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து குற்றம்சாட்டினார். இதையடுத்து, மத்தியஅரசு, ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பிரச்சனை வெளிப்படையாக அனைவருக்கும் தெரியவந்தது.

ரிசர்வ் வங்கியின்  கவர்னராக உர்ஜித் படேல் பொறுப்பேற்கும் முன்பு ரகுராம்ராஜன் அந்தப் பொறுப்பில் இருக்கும் போதே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வந்ததை அனைவரும் அறிவர். இதனிடையில் ரகுராம் ராஜன் 2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் கவர்னர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் படேல் பொறுப்பேற்றார். உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் கவர்னராகச் செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற சில வாரங்களில் பண மதிப்பு நீக்கம் செயல்படுதபட்டது. அப்போதும் கூட உர்ஜித் படேல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் கூடச் சர்ச்சைகள் எழுந்தது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது இந்திய பொருளாதாரம் உலக அளவில் பெரும் சரிவினை சந்தித்த பிறகு தற்போது ஓரளவிற்கு பொருளாதாரம் மீண்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியிடம் விவாதிக்காமலே மத்திய அரசு தன்னிச்சையாக இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையினைச் செய்ததாகச் சர்ச்சை எழுந்தது. அப்போதிலிருந்தே ரிசர்வ் வங்கிக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அது பொது மேடைக்கு வந்தது தான்     விவாதத்திற்குறியதானது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

இந்நிலையில் மேலும் இந்த பிரச்சனையை பெரிதாக்கும் விதமாக, மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதியாக இருக்கும் ரூ.9 லட்சம் கோடியில் ரூ.3.5 லட்சம் கோடியை தருமாறு கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு, வாரியக்குழு உறுப்பினர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் மத்திய அரசு எதிர்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இதற்கிடையே வாரியக்குழுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் செய்திகள் வெளியாகின.

Dispute Between RBI and Government Solved-Best Online News Website in Tamil-News4 Tamil
Dispute Between RBI and Government Solved-Best Online News Website in Tamil-News4 Tamil

வாரியக்குழுக் கூட்டம்

இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் வாரியக்குழுக் கூட்டம் நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மத்திய அரசின் சார்பாக பொருளாதார விவாகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், உறுப்பினர் எஸ். குருமூர்த்தி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் போன்ற 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர்களுக்கும் மற்றும் அரசு தரப்பில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சு மிகவும் சுமூகமாக நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 9 மணிநேரம் வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பிற்கும் இடையே பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக எளிதாகக் கடன் வழங்கும் வகையில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு அதிகாரத்தை ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பாக குருமூர்த்தி வலியுறுத்தினார். மேலும், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும், நலிவடைந்த வங்கிகளு்ககு கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் பயன்படுத்தவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.

தீர்வு

9 மணிநேரம் வரை நடந்த இந்தக் கூட்டத்தின் முடிவில், சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் வழங்கு விதிமுறைகளைத் தளர்த்தவும், வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் கடனை எளிதாக வழங்கவும் விதிமுறைகளைத் தளர்த்த ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசு வழங்கும் சலுகைகளை கட்டுபடுத்தும் விதமாக நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறுகுறு நிறுவனங்கள் கடன்அளித்தலில் கட்டுப்பாடு, வேளாண் கடன் அளித்தல் போன்றவற்றில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இதனால், அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பது என்பது மத்திய அரசுக்குக் சிரமமானதாக இருந்தது. இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளதால், இனிவரும் காலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு கடன்கள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

#Dispute #Between #RBI #Government #Solved

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here