இந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்

0
125
இந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்-News4 Tamil Online Tamil News
Compensation Request from Pakistan Cricket Board Rejected by ICC-News4 Tamil Online Tamil News

இந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்

பாகிஸ்தானுக்கு எதிரான இரு தரப்பு போட்டி தொடரில் விளையாட மறுத்ததற்காக இந்தியாவிடம் ரூ.447 கோடி இழப்பீடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை ஐ.சி.சி. நிராகரித்தது.

பிரச்சனை

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையில் 2008–ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீதான நம்பிக்கை குறைந்து அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய அணி இனிமேல் விளையாட கூடாது என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இரு தரப்பு நேரடி கிரிக்கெட் போட்டி தொடருக்கு இந்திய அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதனால் இரு தரப்பு இடையிலான போட்டி தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து வருகிறது.

இதற்கிடையில் இந்திய அணி இவ்வாறு விளையாட மறுப்பதை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) புகார் மனு கொடுத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுக்கப்பட்ட அந்த புகாரில், ‘2015 முதல் 2023–ம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் இந்திய அணி,பாகிஸ்தான் அணியுடன் 6 போட்டி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் 2014–ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதாவது அப்போது ஐசிசி நிர்வாகத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து போன்ற நாடுகள் செலுத்திய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர  பாகிஸ்தானின் ஆதரவை பெறுவதற்காக இவ்வாறு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி 2015–ம் ஆண்டு இறுதிக்குள் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் 2 போட்டி தொடரில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்திய அணி இந்த ஒப்பந்தத்தை மதித்து எங்களுடன் மோதவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரிகட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடாக ரூ.447 கோடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

விசாரணை

இந்த பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் ஐ.சி.சி. சார்பில் மைக்கேல் பெலோப் தலைமையிலான 3 பேர் கொண்ட தீர்ப்பாய கமிட்டியை அறிவித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த கமிட்டி பிரச்சனை குறித்து இரு தரப்பினரிடமும் 3 நாட்கள் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் முன்னாள் மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் உள்படபலர் இது குறித்து சரியான முறையில் விளக்கம் கொடுத்தனர்.

இந்த விசாரணையில் திட்ட முன்மொழிதல் கடிதத்தை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று சொல்கிறது. அந்த திட்ட முன்மொழிதல் கடிதம் எங்களை கட்டுப்படுத்தாது. அதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் பாகிஸ்தான் அணியுடன் விளையாட மத்திய அரசு அனுமதி அளித்தால் தான் இரு தரப்பு போட்டியில் இந்திய அணி விளையாட முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தீர்ப்பு

இந்நிலையில் நேற்று இந்த இழப்பீடு விவகாரம் குறித்த ஐ.சி.சி விசாரணையின் 26 பக்க தீர்ப்பை அதன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான இழப்பீடு வேண்டுகோள் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஐ.சி.சி விசாரணையின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியமும், கடும் ஏமாற்றம் மற்றும் வருத்தம் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளன.

மேலும் இந்த பிரச்சனை குறித்து இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தகுந்த பேச்சு வார்த்தை நடத்திய பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்கால நடவடிக்கைகளில் இறங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here